ஜனாதிபதியின் குற்றச்சாட்டை சிங்கப்பூர் மறுப்பு!

மத்திய வங்கி நிதி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூர் மறைத்து வைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய குற்றஞ்சாட்டை, சிங்கப்பூர் மறுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் 74 மில்லியன் டொலர் பிணைமுறி ஊழலில் தேடப்பட்டு வருகிறார். இவரை சிங்கப்பூர் மறைத்து வைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தார். மகேந்திரன் சிங்கப்பூரில் இருப்பதாக நம்புவதாகவும் அவரை இலங்கைக்கு திருப்பியனுப்புமாறும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெலன் லூங்கிடம் கடந்த ஜனவரியில் கேட்டிருந்த போதிலும், அது தொடர்பில் இன்னும் எதுவும் நடக்கவில்லை என்றும் ஜனாதிபதி சிறிசேன கூறியிருந்தார்.

மகேந்திரன் இலங்கை வம்சாவளி சிங்கப்பூர் பிரஜையாவார். இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடிக்கு தனது மருமகனுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் 2015 முதல் தேடப்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பிணைமுறி மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு 11 மில்லியன டொலர நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அதிகாரிகளும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கடந்த ஜனவரி முதல் இணைந்து செயற்பட்டு வருவதாக சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து திருப்பியனுப்புவதற்கு தேவையான ஆவணங்கள் இன்னும் இடைக்கவில்லை. சிங்கப்பூரில் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் தேவைப்படும் மேற்படி ஆவணங்களை இலங்கை வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் தகவல் இலங்கையில் இருந்து கிடைத்தவுடன் இலங்கை கேட்டுக்கொண்டபடி இவ்விடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கக்கூடியதாக இருக்கும் என்று சிங்கப்பூர் பேச்சாளர் மேலும் கூறினார்.

குறிப்பிட்ட சில பொதுநலவாய நாடுகளுக்கு சிங்கப்பூர் குற்றவாளிகளை நாடுகடத்த முடியும். அந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!