ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி அமையுமா? அமையாதா ? அடுத்த சுற்றுப்பேச்சு எப்ரலில்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை எதிர்கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்றது.

இவ்விரு தரப்புச் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட தயாசிறி ஜயசேகர,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளாகும். எனவே இருகட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கு பொதுவான கொள்கையொன்றை உருவாக்கிக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

அவற்றை கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்து, கட்சிகளின் மத்திய செயற்குழுவில் ஆராய்ந்து பொதுவான கொள்கைக்கான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும்.

அத்துடன் எமது இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைக் குழப்புவதற்கு யார் முயற்சித்தாலும் கூட கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும். அவ்வடிப்படையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திலங்க சுமதிபால

கடந்தகால வரலாற்றில் எமது கட்சி வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றியீட்டியுள்ளது. அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதையே மக்களும் விரும்புகின்றார்கள். அதற்கு எவரேனும் எதிர்ப்பை வெளியிடுவார்களாயின் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக கூட்டணி அமைப்பதை குழப்பும் வகையில் செயற்படுகின்றார்கள் என்றே மக்கள் கருதுவர் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!