சட்டத்திற்கு முரணாகவே 40(1) தீர்மானத்திற்கு வெளிவிவகார அமைச்சு இணை அனுசரணை – சரத் வீரசேகர

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாத நிலையில் இணை அனுசரணை வழங்கும் வகையில் வெளிவிவகார அமைச்சு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை சட்டத்திற்கு முரணானதாகும்.

எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தவகையில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு வெகு விரைவில் இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பிய ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30(1),34(1) தீர்மானங்களுக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமையை எதிர்த்து தொடர்ச்சியாகக் கருத்து வெளியிட்டு வந்த ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இம்முறை ஜெனீவா கூட்டத்தொடரின் போது எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடத் தேவையில்லை என்பதை உறுதிபடத் தெரிவிப்பதுடன் அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து விலகும்படி வலியுறுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது 40(1) தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அதனூடாக பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு மேலும் இருவருட காலஅவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து ஜெனீவாவிலிருந்து நேற்று காலை நாடு திரும்பிய இராணுவத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!