உலக பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா மிஞ்சும்: – ஹார்வர்டு பல்கலைக் கழகம் கணிப்பு

அடுத்த எட்டு ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவை இந்தியா மிஞ்சும்’ என ஹார்வர்டு பல்கலைக் கழகம் கூறியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த ‘சர்வதேச வளர்ச்சி மையம்’, உலக நாடுகள் 2026ம் ஆண்டு வரையிலான அடுத்த எட்டு ஆண்டுகளில் அடைய உள்ள பொருளாதார வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் 2026 வரையிலான அடுத்த எட்டு ஆண்டுகளில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். 10 நாடுகள் மிகவும் வேகமான வளர்ச்சியை அடையும். இதன்படி, தனது பொருளாதார வளர்ச்சிக்கு எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பி இருந்த நாடுகளின் வளர்ச்சி குறையும். இனிவரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 7.9 சதவீதம் என்ற அளவில் பிரமாண்டமாக இருக்கும். இதன் மூலம், ்அதிகம் வளர்ச்சி அடையும் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்கும். அதற்கு அடுத்த இடத்தில் ஆண்டுக்கு 7.5 சதவீதம் என்ற அளவில் உகாண்டாவின் வளர்ச்சி அமையும். மிகவும் வளர்ந்த நாடுகளாக கருதப்படும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 4.9 சதவீதம், அமெரிக்கா 3 சதவீதம், பிரான்ஸ் 3.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும்.

அதாவது, வளர்ச்சி அடைந்த நாடுகளை விட வளரும் நாடுகளின் வளர்ச்சி வேகமாகவும், அதிகமாகவும் அமையும். இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள், புதிய தொழில்களில் கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, ரசாயனம், வாகனங்கள் மற்றும் மின்னணு உட்பட பல்வேறு முக்கிய துறைகளில் இந்தியா அதிக கவனம் செலுத்தி, தனது ஏற்றுமதி தளத்தை விரிவுப்படுத்தி வருகிறது. இதன் காரணமாகவே, அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதன் பொருளாதார வளர்ச்சி மிகவும் அபரிமிதமாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!