கலப்பு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – திலக் மாரப்பன

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவோ, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கவோ, சிறிலங்கா அரசாங்கத்துக்கு சட்ட ஏற்பாடுகள் அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதத்தில், ஜெனிவா தீர்மானம் குறித்து விளக்கமளித்து உரையாற்றிய அவர்,

“வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதாக சிறிலங்கா வாக்குறுதி கொடுக்கவில்லை.

சாதாரணமாக வெளிநாட்டில் கல்வி கற்ற மருத்துவர் ஒருவர் கூட இங்கு வந்து பணியாற்ற முடியாது. தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். அது வெளிநாட்டு நீதிபதிகளுக்கும் கூட பொருத்தமானது.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதற்கு பொதுவாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்தையும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பெற வேண்டும்.

விமானிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை கொண்டிராதவர்களை விமானம் ஓட்ட அனுமதிக்கும் வகையில் விமான கட்டளை சட்டத்தை திருத்த முடியாது.

அதுபோலவே, வெளிநாட்டு நீதிபதிகளை பற்றி பேசும் போதும், அவர்களின் தகுதிகள் எமக்குத் தெரியாது.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!