கடி மன்னன் சுவாரசுக்கு 9 போட்டிகளில் விளையாட தடை உலக கோப்பையில் எஞ்சிய ஆட்டங்களில் ஆட முடியாது

Luis-Suarezபிரேசிலியா: இத்தாலி வீரரை கடித்த உருகுவே கால்பந்து வீரர் சுவாரசுக்கு 9 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக கோப்பையில் எஞ்சிய ஆட்டங்களில் அவர் ஆட முடியாது.

வினையான ‘கடி’

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த 24-ந்தேதி நடந்த இத்தாலி-உருகுவே இடையிலான ஆட்டத்தின் போது விசித்திரமான ஒரு சர்ச்சை அரங்கேறியது. உருகுவேயின் நட்சத்திர ஆட்டக்காரர் லூயிஸ் சுவாரஸ், திடீரென இத்தாலி வீரர் ஜியார்ஜியோ செலினியின் இடது தோள்பட்டையில் பாய்ந்து கடித்து விட்டார். பற்களின் தடங்கள் அவரது தோளில் பதிந்து இருந்தன.

கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சர்வதேச கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தீவிர விசாரணை நடத்தியது. அவர் கடித்து குதறும் வீடியோ காட்சிகளை ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் பல்வேறு கோணங்களில் பார்த்து ஆராய்ந்தனர். அது மட்டுமின்றி சுவாரஸ் ஏற்கனவே கிளப் கால்பந்து போட்டிகளில் இரண்டு முறை வீரர்களை கடித்து தடை பெற்ற நிகழ்வுகளும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

9 போட்டிக்கு தடை

சுவாரஸ் மீதான குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபணமானதால், அவருக்கு 9 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவதாகவும், இது போன்ற நடத்தையை கால்பந்து களத்தில் ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் சர்வதேச கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கிளாடியோ சல்செர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவருக்கு ரூ.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதுடன், அடுத்த 4 மாதங்களுக்கு கால்பந்து தொடர்பான எந்த நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் ஒழுங்கீன செயலுக்காக, அதிக ஆட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் இது தான். இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு உலக கோப்பையில் ஸ்பெயின் வீரர் லூயிஸ் என்ரிகியூவின் மூக்கை உடைத்ததற்காக இத்தாலியின் மவுரோ டாசோட்டிக்கு 8 ஆட்டத்தில் விளையாட தடை செய்யப்பட்டதே இந்த வகையில் அதிகபட்ச தண்டனையாக இருந்தது நினைவு கூரத்தக்கது.

உருகுவேக்கு சிக்கல்

9 போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த உலக கோப்பையில் எஞ்சிய ஆட்டங்களில் சுவாரஸ் விளையாட முடியாது. ஏனெனில் ஒரு அணி இன்னும் அதிகபட்சமாக 4 ஆட்டங்களில் மட்டுமே ஆட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

27 வயதான சுவாரஸ் உருகுவே அணியின் தூண் ஆவார். இந்த உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து, அந்த அணி 2-வது சுற்றை எட்ட உதவிகரமாக இருந்தார். அவர் இல்லாதது உருகுவே அணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தும். முன்னாள் சாம்பியனான உருகுவே அணி இரண்டாவது சுற்றில் கொலம்பியாவை நாளை சந்திக்க உள்ளது.

இந்த ‘கடி’யால் சுவாரஸ், கிளப் போட்டி வருமானங்களையும் இழக்கிறார். இவர் இங்கிலாந்தில் நடக்கும் பிரபலமான பிரிமியர் லீக் கால்பந்தில் லிவர்பூல் கிளப்புக்காக விளையாடி வருகிறார்.

4 மாதங்கள் கால்பந்தில் இருந்து முழுமை யாக ஒதுங்கி இருக்க வேண்டி இருப்பதால் அந்த காலக்கட்டத்தில் லிவர்பூல் அணியின் 9 ஆட்டங்களை அவர் இழப்பார்.

Tags: , ,

Leave a Reply