கொழும்பின் அறிவுறுத்தல்படியே ஜெனிவாவில் உள்ள தூதுவர் கையெழுத்திட்டார் – மங்கள

கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே, ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி ஏஎல்ஏ அசீஸ், சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டார் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்ட சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏஎல்ஏ அசீசை, சிறிலங்கா அதிபர் திருப்பி அழைக்க வேண்டும் என்று, மகிந்த ஆதரவு அணியினர் கோரி வருகின்றனர்.

அத்துடன், தமக்குத் தெரியாமலேயே ஜெனிவா தீர்மானத்தில் இணை அனுசரணை கையெழுத்து போடப்பட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதுதொடர்பான தெளிவுபடுத்தியுள்ளார்.

“ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி ஏஎல்ஏ அசீசுக்கு கொழும்பில் இருந்து, பிரதமரின் செயலகத்தின் கீழ் உள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ தித்தவெலவே, இணை அனுசரணை தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட நல்லிணக்கச் செயற்பாடுகளை முழுமையாக ஒருங்கிணைக்கும் நோக்கில், நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகம், 2016ஆம் ஆண்டு அமைச்சரவையினால் உருவாக்கப்பட்டது.

ஜெனிவாவில் உள்ள தூதுவர் அசீசுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவும் முழுமையாக அறிந்திருந்தார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!