அரசியல் கைதிகளே இல்லை – கைவிரித்த சிறிலங்கா அமைச்சர்

சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று மறுத்துள்ள சிறிலங்காவின் நீதி அமைச்சர், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் 54 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் மீது விரைவில் விசாரணைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது, நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து விட்ட தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்காவின் நீதிஅமைச்சர் தலதா அத்துகோரள,

“சிறிலங்காவில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை. விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் சிலர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

54 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் வழக்குகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

மூன்று சந்தேக நபர்கள் தொடர்பாக, சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. ஆறு சந்தேக நபர்கள் தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!