“அர்ஜுன ஆலோசியஸ் யாருடைய நண்பர் ” : சபையில் வாய்த்தர்க்கம் – நாமலுக்கும் அர்ஜுனவிற்கும் இடையில் நெருங்கிய நட்பு – மலிக் சமரவிக்கிரம

அர்ஜுன ஆலோசியஸ் யாருடைய நண்பர்” சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவிற்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் நிகழ்ந்தது. அர்ஜுன அலோசியஸுக்கும் எனக்கும் இடையில் எந்த நட்பும் இல்லை, நாமலுக்கும் அர்ஜுனவிற்கும் இடையிலேயே நெருங்கிய நட்பு உள்ளது எனவும் மத்திய வங்கி பிணைமுறி கூட்டத்தில் பிரதமரின் ஆலோசகராக மட்டுமே நான் கலந்துகொண்டேன் என அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02.04.2019) வரவு செலவு திட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி திறமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் செஹான் சேமசிங்க, முதலீட்டுகளை நாட்டுக்கு கொண்டுவருவதாக கூறிக்கொண்டு மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் வேலையை மட்டுமே இந்த அரசாங்கம் செய்துள்ளது.

குறிப்பாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட தலைமைகளே இந்த ஊழல் விவகாரத்தில் தலையிட்டனர். அர்ஜுன அலோசியஸ் -மலிக் சமரவிக்கிரம நெருங்கிய நண்பர்கள் என்பதால் இவை மூடி மறைக்கப்பட்டு விட்டது என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம:-

அர்ஜுன் அலோசியஸ் எனது நண்பர் அல்ல. அவர் நாமல் ராஜபக் ஷவின் நெருங்கிய நண்பர். எனக்கும் அலோசியஸிற்கும் இடையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. நீங்கள் பொய் பிரசாரம் செய்து குழப்பவேண்டாம் என்றார்.

இதன் போது மீண்டும் கருத்து தெரிவித்த செஹான் எம்.பி :- நீங்கள் ஏன் மத்திய வங்கி பிணைமுறி பங்கு விற்பனை கூட்டத்துக்கு வந்தீர்கள், அதன் பின்னர் தான் மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றது.

அமைச்சர் மலிக் :-

நான் பிரதமரின் ஆலோசகராக மட்டுமே அங்கு வந்தேன், அமைச்சர் கபீர் ஹசீமும் அவ்வாறே அங்கு வந்தார். அதை தாண்டி எனக்கும் அந்த பிணைமுறி விவகாரத்திற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. அதேபோல் எனக்கும் அலோசியஸுக்கும் இடையில் எந்த உறவும் இல்லை என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய மஹிந்தாநந்த எம்.பி :- உங்களுக்கு அலோசியசை தெரியாதா? நீங்கள் தானே அலோசியஸ்ஸிடம் பணம் வாங்கி ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுகூட்டங்களுக்கு செலவழித்தீர்கள் என்றார்.

இதன்போது மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் மலிக் :- நீங்கள் கூறுவது முழுப்பொய், இதனை நான் நிராகரிக்கின்றேன் என்றார்.

மீண்டும் உரையாற்றிய செஹான் சேமசிங்க எம்.பி :- கடந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், உள்ளூராட்சி தேர்தல் என்பவற்றுக்கு அலோசியஸ் தான் பணம் கொடுத்தார். அடுத்த தேர்தலுக்கும் அவர்களே நிதி உதவிகளை செய்யவுள்ளனர் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!