அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி கைது!

சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி சூரியின் மகன் ஜீசஸ்(வயது 32). இவன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் பதிவாகி உள்ளன. ரவுடியான ஜீசஸ் தனது பிறந்தநாளை சக ரவுடிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராசிபுரம் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் கொண்டாடினான். அப்போது, பிரமாண்டமான கேக்கை சுமார் 2 அடி நீளமுள்ள அரிவாளால் வெட்டி ஜீசஸ் தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஜீசஸ் மற்றும் அவனது சகோதரர்கள் சிலம்பரசன்(32), மோசஸ்(29) மற்றும் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்(32), பனமரத்துப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்(35) ஆகியோர் இருந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவர் மீதும் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ரவுடி பட்டியலில் உள்ளனர். இந்த நிலையில் ஜீசஸ் உள்பட 5 பேரையும் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!