தினமும் 5 பெண்கள் கற்பழிப்பு: -டெல்லி போலீஸ் அதிர்ச்சி தகவல்

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. இருப்பினும் அங்கு கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. இதுதொடர்பாக டெல்லி போலீசார் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களை வெளியிட்டு உள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

இந்த ஆண்டின் முதல் 3½ மாதங்களில் மட்டும் தினமும் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கடந்த மாதம் 15-ந் தேதி வரை 578 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு 563 கற்பழிப்பு வழக்குள் பதிவாகி இருந்தன.

மேலும் இதே கால கட்டத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக இந்த ஆண்டில் 883 வழக்குகளும், கடந்த ஆண்டில் 944 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 2017-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 49 கற்பழிப்பு வழக்குகளும், 2016-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 64 கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன. இவ்வாறு அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!