ஜெனிவா தீர்மானம் குறித்து அரசு உயர்மட்ட ஆலோசனை!

ஜெனிவா தீர்மானங்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்து தீர்மானிப்பதற்காக அரச உயர் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச உயர் மட்டத்தினர் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வாறான அணுகுமுறைகளைக் கையாள்வது என்பது பற்றி இந்த உயர் மட்டக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேசிய பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒரு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்தும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும். எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரம், அரசாங்கம் தன்னிச்சையாக மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கிவிட்டதாக எதிரணியின் சிலர் சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் ஏற்கமுடியாது.

ஜனாதிபதியின் முழுமையான இணக்கத்துடன் தயாரிக்கப்பட்ட ஆவணத்தையே ஜெனிவாவில் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில், அடுத்த வாரமளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு பயணம் செய்து நிலவரங்களை ஆராய்ந்து செல்லவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!