கோத்தாவுக்கு எதிரான வழக்குகள் – ஐதேகவுக்கு தொடர்பில்லை!

கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள சிவில் வழக்குகள் அந்நாட்டு பிரஜை ஒருவரால் தொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் அமெரிக்கப் பிரஜை ஒருவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும். ஆகவே இது குறித்து இலங்கை எந்த விதத்திலும் தொடர்புபடப் போவதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இந்த சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இலங்கையில் அவருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இவை அனைத்துமே சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் அவற்றில் எந்த தலையீடுகளும் இல்லாது நாம் செயற்பட்டு வருகின்றோம்.

அதேபோல் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரா இல்லையா என்பது குறித்து மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணிக்குள் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு அவர் களமிறக்கப்பட்டாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தகுதியான வேட்பாளர் ஒருவரை நாம் தெரிவு செய்து களமிறக்கத் தயாராகவுள்ளோம். சிங்கள மக்களை மட்டுமல்லாது தமிழ், முஸ்லிம் மக்களையும் பாதுகாக்கும் வகையில் அவர்களின் ஆதரவையும் பெறும் வேட்பாளரை நாம் களமிறக்குவோம்” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!