காலில் விழுந்து முத்தம் கொடுத்து சமாதானத்திற்காக கோரிக்கை விடுத்தார் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் நேற்று சூடானில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போது தெற்கு சூடானின் ஜனாதிபதி மற்றும் எதிர் அணித் தலைவர்களின் கால்களில் விழுந்து உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தெற்கு சூடானில் 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் இடம்பெற்றது. பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு பல மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.

முப்பது வருட ஆட்சிக்கு பின்னர் சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பசீர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மகிழ்ச்சி இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து அச்சநிலையாக மாறியுள்ளது.

சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பசீர் இராணுவத்தினால் பதவியிலிருந்து அகற்றப்பட்டதை கொண்டாடுவதற்காக வீதியில் இறங்கிய மக்கள் தற்போது அதிகாரத்திலிருக்க முயலும் இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக நீண்ட போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட இராணுவ பேரவை அரசாங்கத்தை கலைத்துள்ளதுடன் நாட்டின் அரசமைப்பை இடைநிறுத்தியுள்ளதுடன் மூன்றுமாதகால அவசரநிலையை அறிவித்துள்ளது.

இந்நிலையில், சூடானில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் தெற்கு சூடானின் ஜனாதிபதி மற்றும் எதிர் அணி தலைவர்களின் கால்களில் விழுந்து உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு வேண்டி, அவர்கள் இருவரின் காலிலும் விழுந்து முத்தமிட்டு மன்றாட்டமாக கேட்டுக்கொண்டார்.

இதன்போது திருத்தந்தை, “அன்புள்ள சகோதர சகோதரிகளே அமைதி சாத்தியம். நான் இதை மீண்டும் மீண்டும் சொல்லுவதில் ஓயமாட்டேன் – அமைதி சாத்தியம்” என்றுகூறினார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சூடானில் இடம்பெற்ற உள்நாட்டுப்போரில் சுமார் 4 இலட்சம் பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!