99 வயது பாட்டி உடலை உடற்கூறு ஆராய்ச்சி செய்த மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவில் இறந்துபோன 99 வயது பாட்டியின் உடலை உடற்கூராய்வு செய்து பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓரிகனை சேர்ந்த ரோஸ் மேரி என்ற மூதாட்டி 2017 ஆம் ஆண்டு தனது 99 வயதில் இறந்துபோனார். இவர் இறந்தபின்னர் இவரது உடல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானம் செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஓரிகன் ஹெல்த் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள் உடற்கூறு ஆராய்ச்சி செய்தபோது அவரது உடல் பாகங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அடிவயிற்றுப் பகுதி உறுப்புகளான (Abdominal organs) வயிறு, கல்லீரல், கணையம், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல் என அனைத்து உறுப்புகளும் வலம்புறம் இருப்பதற்கு பதிலாக இடதுபக்கமாக இருந்துள்ளது. ரோஸ் மேரி ஒரு அரியவகை நோயினால் (situs inversus) பாதிக்கப்பட்டிருந்தார். உடல் இயக்கத்துக்கு தேவையான அனைத்து உறுப்புகளும் இடம்மாறி இருந்தும் 99 ஆண்டுகள் இது அறியாமல் உடல்நலப்பிரச்சினைகள் எதுவுமின்றி உயிர் வாழ்ந்துள்ளார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவரது உடலை உடற்கூறு செய்து பார்த்ததில் புது அனுபவம் கிடைத்தது என கூறியுள்ளனர். இதுபோன்ற உறுப்புகள் இடம்மாறி இருந்தால் கண்டிப்பாக இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும், ஆனால் இவரது இதயத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இடதுபுறமாக இருந்தது. ஐந்து கோடி பேரில் ஒருவருக்கு இதேபோன்று உள்உறுப்புகள் இடம்மாறி இருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ரோஸ் மேரியின் குடும்பத்தார் கூறியதாவது, மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட அவரது உடலில் இருந்து மூன்று உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. ஆனால் குடல்வால்வு பகுதி மட்டுமே இடம்மாறி இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதே தவிர வேறு உறுப்பு இடமாற்றங்கள் குறித்து அவர் உயிரோடு இருந்தபோது எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!