குழந்தைகளை கடத்தி விற்ற பெண் சிக்கினார்

தமிழ்நாடு – கொல்லிமலையில் குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்பான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கொல்லிமலையில் மட்டும் 7 குழந்தைகள் விற்கப்பட்டுள்ளனர் என்றும் 20 குழந்தைகள் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் காணப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து தெரியவருவதாவது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பெண் தாதியர் உதவியாளர் அமுதவள்ளி. இவர் பேசிய குரல் பதிவு ஒன்று வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

பல இலட்சம் ரூபா மதிப்பில் குழந்தைகளை அமுதவள்ளி விலைபேசி விற்பனை செய்து வந்தமை இதன்மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டுவந்த கொல்லிமலை செங்கரை பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த அம்பியூலன்ஸ் வாகன சாரதி முருகேசன் உள்ளிட்ட மூவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசின் உத்தரவின்படி, ராசிபுரம் பொலிஸார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

குறித்த குரல் பதிவில் அமுதவள்ளியிடம் தொலைபேசியில் பேசியவர் தன்னை தர்மபுரியைச் சேர்ந்த சதீஸ்குமார் என அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் யார் என்பது குறித்தும் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அமுதவள்ளியிடம் தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசியவர்களையும் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனிடையே அமுதவள்ளியின் சட்டவிரோத குழந்தை விற்பனை தொழிலுக்கு உடந்தையாக செயற்பட்ட அம்புலன்ஸ் வாகன சாரதி முருகேசன், கொல்லிமலையில் மட்டும் 7 குழந்தைகளை விற்பனை செய்ததாக பொலிஸ் விசாணையின்போது தெரியவந்துள்ளது.

இதில் 5 பேரின் வீடுகளை முருகேசன் அடையாளம் காட்டியிருப்பதாகவும், இருவரின் வீடு முருகேசனுக்கு தெரியவில்லை எனவும், பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொல்லிமலையில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய சுகாதாரத் துறையின் பொலிஸாரின் உதவியுடன் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் 20 பிறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிட்டுள்ள குழந்தைகள், சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகவும் சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!