தொடரும் வேட்டையில் அம்பலமாகிய சஹ்ரானின் வலையமைப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்திய ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற மொஹம்மட் சஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழுவின் அனைத்து தொடர்புகளும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த தொடர்புகள் குறித்து முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதனால் பல முக்கிய கைதுகள் சாத்தியப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழுவை பலவீனப்படுத்தி விட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசெகர சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதிகளின் அனைத்து தொடர்புகளையும் நாம் தற்போது விசாரணைகளில் முழுமையாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளோம். அவர்களை முழுமையாக நாம் பலவீனப்படுத்திவிட்டோம். சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி. குழுவினர் முன்னெடுக்கும் விசாரணைகள் மிக வெற்றிகரமாக இடம்பெறுகின்றன.

யாரும் வீணாக வதந்திகளை நம்பி அஞ்ச தேவை இல்லை. நாம் பாதுகாப்பை உறுதிசெய்ய முப்படையினருடன் இணைந்து சோதனை நடவடிக்கைகளை தொடர்வோம். நாட்டில் பல பகுதிகளில் பல முக்கிய கைதுகள் சோதனைகளின் போது இடம்பெற்றுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் நாடளவைய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பல முக்கிய கைதுகள் இடம்பெற்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!