வடக்கிற்குள் குண்டு வாகனங்கள் – பீதியடைய வேண்டாம் என்கிறது இராணுவம்

வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் வடக்கு மாகாணத்துக்குள் நுழைந்துள்ளதாக வெளியாகின்ற தகவல்கள் குறித்து யாரும் பீதியடைய வேண்டியதில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் நுழைந்துள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியாவில் நான்கு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன், சந்தேகத்துக்குரிய வாகனங்களின் பதிவு இலக்கங்கள் அடங்கிய பிரசுரங்களும் வெளியிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து,

”வடக்கிற்குள் வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் நுழைந்துள்ளதாக வெளியான அறிக்கைகளுடன் நாங்கள் இணங்கவில்லை.

எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதால், இதுகுறித்து யாரும் பீதியடைய வேண்டாம்” என்று கூறினார்.

அத்துடன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் தேடுதல்களில் முப்படைகளையும் சேர்ந்த 15 ஆயிரம் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் படையினர் இந்த தேடுதல்களில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!