வடக்கில் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டாம்! சுரேஸ்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்துள்ளமை உண்மையாகவே உள்நோக்கம் கொண்டது. அரசின் இத்தகைய செயற்பாடுகள் மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத பிரச்சினைகளை ஆரம்பிப்பதற்கான முன் முயற்சியாக உள்ளது எனத் தெரிவித்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.

அநாவசியமாகப் பல்கலைக்கழகத்துக்குள் கொந்தளிப்புக்களை உருவாக்கக்கூடிய நிலைமைகளை இராணுவமும் பொலிஸாரும் இணைந்து மேற்கொள்வது ஆரோக்கியமானதல்ல. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுக் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டில் இப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பாகத்தான் தேடுதல் வேட்டைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரை அல்லது வடக்கைப் பொறுத்தவரை அவர்கள் பல காரணங்களைக் கூறி தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இதற்கு பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதாகவும் அரச தரப்பினர்கள் கூறக்கூடும். நாங்கள் அரசுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில், போராளிகள் தொடர்பாகவோ அல்லது மாவீரர்கள் தொடர்பாகவோ வருடாவருடம் அதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அந்த நிகழ்வுகளில் வடக்கு – கிழக்கில் இருப்பவர்கள் மட்டு மல்லாது தெற்கிலிருந்தும் சிங்கள புத்திஜீவிகள் கூட கலந்து கொள்கிறார்கள். ஆகவே பிரபாகரனின் புகைப்படம் இருப்பது ஒன்றும் பிரச்சினைக்குரிய விடயமல்ல. சகல ஊடகங்களிலும் பிரபாகரனின் புகைப்படங்கள் இன்னும் வந்து கொண்டு இருக்கின்றன. சகல அச்சு ஊடகங்களிலும் பிரபாகரனின் புகைப்படம் வருகின்றது.

அவ்வாறான புகைப்படம் பல்கலைக்கழக மாணவர் சங்கக் கட்டடத்தில் இருக்கக் கூடாதென்பதல்ல. ஆகவே இது உண்மையாகவே ஒரு உள்நோக்கம் கொண்டு மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத பிரச்சினைகளை ஆரம்பிப்பதற்கான ஒரு முன்முயற்சியாகத் தான் எங்களுக்குப்படுகின்றது.

அநாவசியமாக பல்கலைக்கழகத்திற்குள் கொந்தளிப்புக்களை உருவாக்கக் கூடியஒரு நிலைமையை இராணுவமும் பொலிஸாரும் இணைந்து உருவாக்குவது ஆரோக்கியமான விடயமல்ல. சர்வதேசப் பயங்கரவாதம் என்று சொன்ன விடயம் முக்கியமானதாக இருக்கின்ற பட்சத்தில் இப்பொழுது தமிழ் இளைஞர் களை – பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்ய முற்படுவது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத ஒரு விடயம். ஆகவே புதிய புதிய குழப்பங்களை உருவாக்க அரசோ அல்லது இராணுவமோ, பொலி ஸாரோ முயற்சிசெய்யக்கூடாது.

வடக்கு மாகாணம் அமைதியாக இருக்கின்றது. அமைதியான இடத்தில் குழப்பத்தை உருவாக்கத் தயவு செய்து முயற்சிக்க வேண்டாம். ஆகவே உடனடியாக மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தில் சுமூக சூழல் ஏற்பட வேண்டும்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!