சஹ்ரான் குழுவின் இரண்டு பயிற்சி முகாம்கள் கண்டுபிடிப்பு

சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு பயிற்சி முகாம், நேற்று மட்டக்களப்பு -வாழைச்சேனைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

வவுணதீவில் இரண்டு காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போதே, இந்த பயிற்சி முகாம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது,

ரிதிதென்ன, ஓமடியாமடு பகுதியில் இந்த பயிற்சி முகாம் அமைந்துள்ள காணி காசிமுக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது,

இந்த பயிற்சி முகாமில், 236 ஜெலிக்னைட் குச்சிகள், இரண்டு பிவிசி குழாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. அத்துடன் ஒரு பீப்பாயில் அமிலத் திராவகமும் கைப்பற்றப்பட்டது.

அந்த பயிற்சி முகாமில் ஒரு கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பதுங்குகுழியை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததாக, கைது செய்யப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நுவரெலிய பிளாக் பூல் பகுதியில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு பயிற்சி முகாம், நேற்று முற்றுகையிடப்பட்டது.

சாய்ந்தமருதுவில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த இரண்டு மாடி பயிற்சி முகாம் பற்றிய தகவல் கிடைத்தது.

இந்த பயிற்சி முகாமில், 38 பேருக்கு சஹ்ரான் பயிற்சி அளித்துள்ளார்.

அத்துடன் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகையும், இந்த முகாமில், சஹ்ரானின் மேற்பார்வையில் ஏப்ரல் 17ஆம் நாள் நடத்தப்பட்டுள்ளது.

குறுகிய கால அடிப்படையில் இந்த கட்டடம் வாடகைக்கு பெறப்பட்டிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!