யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் – இராணுவத்தின் தேடுதலின் விளைவா?

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரத்தினம் விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், இந்த இடைநிறுத்த உத்தரவுக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும், பதவி நீக்கும் அதிகாரங்கள் சிறிலங்கா அதிபருக்கு இருப்பதாக, மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் புதிய தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும், பேராசிரியர் மொகான் டி சில்வா கூறினார்.

பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கான தகுதிவாய்ந்த அதிகாரியை நியமிக்க உயர்கல்வி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி இன்று நியமனம் அறிவிக்கப்படும்.

அதன் பின்னர், வழக்கமான நடைமுறைகளின்படி, புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான செயல்முறைகள் ஆரம்பமாகும். அதற்கு சில மாதங்கள் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் விக்னேஸ்வரன் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

ஏப்ரல் 30ஆம் நாளில் இருந்து பதவி இடைநிறுத்தம் செய்யப்படுவதாக பேராசிரியர் விக்னேஸ்வரனுக்கு, சிறிலங்கா அதிபரின் செயலரினால் கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்றே அந்தக் கடிதம் தொலைநகல் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது,

எனினும், தமக்கு அவ்வாறான கடிதம் கிடைக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேராசிரியர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் தேடுதல்களை நடத்தி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம், இனப்படுகொலை தொடர்பான பதாதைகளை கைப்பற்றியதுடன், மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலரையும் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் துணைவேந்தர் பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளது.

எனினும், தற்போதைய பாதுகாப்புச் சூழலுக்கும், துணைவேந்தர் விக்னேஸ்வரனின் பதவிநீக்கத்துக்கும் தொடர்புகள் இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் பேராசிரியர் விக்னேஸ்வரனை விட அதிகம் வாக்குகளைப் பெற்றிருந்த பேராசிரியர் சற்குணராஜா அல்லது முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், பதில் துணைவேந்தராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!