பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டம்!

பொள்ளாச்சி பாலியல் புகார் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரும் அவர்களது தாயார்களின் மனுக்களுக்கு தமிழக உள்துறைச் செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநாவுக்கரசுவின் தாயார் லதா, சபரி ராஜன் தாயார் பரிமளா ஆகியோரின் மனுக்களில் பாலியல் வன்கொடுமை வழக்கை அதற்கு உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டர் சட்ட உத்தரவு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் குண்டர் சட்ட உத்தரவு குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்யவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!