169 வெளிநாட்டவர்களை வவுனியாவில் தங்க வைக்க ஏற்பாடு!

நீர்கொழும்பில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளில் 169 பேரை வவுனியாவில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று வவுனியாவிற்கு பயணம் செய்து இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து அகதி அந்தஸ்து கோரிய நிலையில்,நீர்கொழும்பில் வசித்து வந்த பாகிஸ்தான், மியன்மார், சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 வரையிலான அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனையடுத்து அந்த மக்களை வேறு பகுதிகளில் தங்க வைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்தானிகராலயம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதற்கமைவாக வெளிநாட்டு பிரஜைகள் 700 பேரில் 169 பேரை வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வடமாகாணத்திற்குரிய பலநோக்கு கூட்டுறவுச் சங்க பயிற்சிப் பாடசாலையில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன வவுனியாவிற்கு சென்று தங்க வைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டதுடன், மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். வவுனியா அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!