முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கவா மாணவர்கள் கைது? – கஜதீபன் கேள்வி

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் திசைதிருப்பவே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் குற்றம்சாட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்கும் சூழ்சியும் மாணவர்களின் கைதுகளின் பின்னால் அடங்கியிருப்பதாக தெரிவித்துள்ள கஜதீபன், என்ன தடைகள் வந்தா லும் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுட்டிப்பார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழ் மக்களுக்காக உயிர்நீத்த தீயாக தீபம் திலிபனுக்கு தூபி அமைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், அவரது புகைப்படத்தை வைத்திருந்தார்கள் என்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கஜதீபன் குறிப்பிட்டார்.

குறிப்பாக கடந்த வருடம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையேற்று நடத்தியிருந்த நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டான இம்முறை பெரும் எடுப்பில் நினைவுகூறப்படுவதை தடுக்கவா இந்தக் கைதுகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் கஜதீபன் கேள்வி எழுப்பினார்.

1970 மற்றும் 1980 ஆம் ஆண்டு கால கட்டங்களில் தமிழ் சமூகத்தின் மீது இவ்வாறான அடக்குமுறைகளை பிரயோகித்ததன் காரணமாகவே தமிழ் இளைஞர் சமூகம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதை தற்போதைய ஆட்சியாளர்கள் மறந்து விடக் கூடாது எனவும் கஜதீபன் எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!