சஹ்ரானின் மகளின் இரத்த மாதிரியைப் பெற்று மரபணுச் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி

ஷங்ரி-லா விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் காசிமின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு, அவரது மகளின் இரத்த மாதிரியைப் பெற்று மரபணுச் சோதனையை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க ஜயசூரிய நேற்று இந்த அனுமதியை வழங்கினார்.

ஷங்ரி-லா விடுதியில் இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல்களை நடத்தினர் என்று நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அவர்கள் இருவரும், தாக்குதலுக்கு முன்பதாக, ரெம்ப்லேர்ஸ் வீதி, கல்கிசை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருந்தனர் என்றும் கூறினர்.

குண்டுதாரிகள் தங்கியிருந்த விடுதி அறையில் மீட்கப்பட்ட சில ஆடைகள் தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போது, அவற்றை மேலதிக பரிசோதனைகளுக்கு அனுப்பவும், நீதிவான் உத்தரவிட்டார்.

குண்டுதாரிகள் வசித்த இடங்களில் இருந்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள், தங்கம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது.

36 பேர் கொல்லப்பட்ட ஷங்ரி-லா விடுதி குண்டுவெடிப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!