புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது – சஜித் பிரேமதாச

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதே தற்போது நாட்டின் தேவையாக உள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் இவ்வாறு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

பயங்கரவாதமற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.நம் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்துகின்ற புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சியின் போது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை முழுமையாக பாதுகாக்க முடியாது. தற்போது நாட்டின் தேவை தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதேயாகும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் மனித உரிமைகளையோ , ஜனநாயகத்தையோ பாதுகாக்க முடியாது.

கடந்த 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை தோல்வியடையச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை பலப்படுத்த வேண்டும்.

அத்தோடு ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்காக தேசிய ஒழுங்கு பத்திரத்தை சற்று புறந்தள்ளி தேசிய பாதுகாப்பிற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் ஜனநாயகத்தையோ அல்லது மனித உரிமைகளையோ பெற முடியாது.

ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.எனவே அதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!