யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள்

சிறிலங்காவில் அடைக்கலம் கோரியுள்ள ஒரு தொகுதி வெளிநாட்டு அகதிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று குடியமர்த்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் 1600இற்கும் அதிகமான அகதிகள் சிறிலங்காவில் புகலிடம் கோரியிருந்தனர்.

இவர்கள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அண்மைய குண்டுத் தாக்குதல்களை அடுத்து இவர்களுக்கு உள்ளூர்வாசிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து, வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் பல இடங்களில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் 35 வெளிநாட்டு அகதிகள் வவுனியா பூந்தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 அகதிகள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் உதவியுடன் இவர்கள், யாழ்ப்பாணத்தில் வெறுமையாக உள்ள வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!