சிறிலங்காவில் எகிறியது எரிபொருள்களின் விலை – நீண்ட வரிசையில் வாகனங்கள்

சிறிலங்காவில் எரிபொருள்களில் விலைகள் இன்று நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருள்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பெற்றோல் 20 ரூபாவினாலும், டீசல் 14 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 57 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

நள்ளிரவு தொடக்கம், 92 ஒக்ரேன் பெற்றோல் 137 ரூபாவாகவும், 95 ஒக்ரேன் பெற்றோல் 148 ரூபாவாகவும், டீசல் 109 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 101 ரூபாவாகவும் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியானதை அடுத்து, நாடெங்கும் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

அதேவேளை, இனிமேல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை மீளாய்வு செய்யப்படும் என்று சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய பொறிமுறைக்கு அமைய எரிபொருள்களின் விலைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், இதன் போது விலைகள் அதிகரிக்கவும், குறைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!