நாளாந்தம் விசாரிக்கப்படவுள்ள கோத்தாவுக்கு எதிரான வழக்கு

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு மேல் நீதிமன்றத்தில் அடுத்த மாதம், நாளாந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

மெதமுலானவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைப்பதற்கு 33.9 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ட்ரயல் அட் பார் முறையில் நடக்கும் இந்த வழக்குநேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மருத்துவ சிகிச்சைக்காக கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூர் செல்வதற்கு, மே 24 தொடக்கம் ஜூன் 2 வரை அனுமதி தர வேண்டும் என்று, நீதிமன்றிடம் அவரது சட்டவாளர் கோரியிருந்தார்.

இதையடுத்து, கோத்தாபய ராஜபக்ச குறித்த காலத்துக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதித்த நீதிபதிகள் மூவரும், வழக்கை ஜூன் 19ஆம் நாளுக்கு ஒத்திவைத்தனர்.

அதற்குப் பின்னர் இந்த வழக்கின் மீது ஒவ்வொரு நாளும் விசாரணை இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!