அதிபர் செயலக தலைமை அதிகாரியை மாட்டி விட்ட இந்திய வணிகருக்கு கொலை அச்சுறுத்தல்

சிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் மாட்டி விட்ட இந்திய வணிகருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்திய வணிகரிடம் 540 மில்லியன் ரூபா இலஞ்சத்தைக் கோரியிருந்த மேற்படி அதிகாரிகள் 100 மில்லியன் ரூபாவை பெற இணங்கியிருந்தனர்.

அதற்கமைய முதற்கட்டமாக 20 மில்லியன் ரூபாவை கைமாற்றிய போது, இரண்டு அதிகாரிகளும் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையிலேயே, இவர்களை அதிகாரிகளிடம் மாட்டி விட்ட இந்திய வணிகருக்கு மர்ம நபர் ஒருவர் நேரில் சென்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை கொழும்பில் உள்ள இந்திய வணிகரின் பணியகத்துக்குச் சென்ற ஒருவர், வரவேற்பாளரை மிரட்டியதுடன், இரண்டு பக்க கடிதத்தையும் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.

அதில், இந்திய வணிகருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து. குறித்த வணிகர், கறுவாத்தோட்டம் காவல் நிலையத்தில் அச்சுறுத்தல் கடிதத்துடன் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!