தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை இருவாரங்களுக்குள் சமர்பிக்க எதிர்கட்சி இடமளிக்காது- தயாசிறி

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கை,அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் பின்னரே சமர்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் பணியையும் தெரிவுக்குழுவில் உள்ளடக்கி அவரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் குற்றஞ் சாட்டியிருக்கின்றது.

சுதந்திர கட்சி தலைமைக்காரியாலயகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அங்கு தொடர்ந்தும் கூறியதாவது,

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக மாத்திரமே தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணையையும் உள்ளடக்க வேண்டிய தேவை கிடையாது. அவருக்கும் குண்டுத் தாக்குதல்களுக்கும் தொடர்பிருந்தால் உள்ளடக்குவதில் பிரச்சினை இல்லை. ஆனால் அவ்வாறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணை முற்றுமுழுதாக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு சமர்பிக்கப்பட்டது. ஜூன் மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் அது பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எனவே இந்த விடயத்தையும் தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பையும் இணைத்து குழப்பமடையத் தேவையில்லை.

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்கட்சி ஒருபோதும் இடமளிக்காது என்பதோடு ரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணையை தெரிவுக்குழுவில் உள்ளடக்கியமைக்கு கடும் எதிர்ப்பினையும் நாம் வெளியிடுகின்றோம் என அவர் தெரிவித்தார்.