பெற்றோரின் முழு சம்மதத்துடன் ஜெயின் துறவியான சிறுமி!

சூரத்தைச் சேர்ந்தவர் வினித் ஷா. இவர் ஒரு அரசு ஊழியராவார். இவரது மகள் குஷி ஷா(12). குஷிக்கு 8 வயது முதலே, துறவியாக வேண்டும் என்கிற எண்ணம் இருந்து வந்துள்ளது. பொதுவாக வீட்டில் இருக்கும் பெண் பிள்ளை துறவியாவதை பலரும் ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டார்கள். பெரும்பாலும் எதிர்ப்பு வலுக்கும் நிலையே ஏற்படும். ஆனால், வினித் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் குஷியின் இந்த முடிவினை வரவேற்று முழு ஒத்துழைப்பும் நல்கியுள்ளனர். இது குறித்து குஷியின் தந்தை வினித் கூறுகையில், ‘இத்தனை சிறிய வயதிலேயே குஷிக்கு இந்த அளவிற்கு நுண்ணறிவு இருப்பதை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம். அனைத்து குழந்தைகளுக்கும் இந்த எண்ணம் தோன்றாது. குஷி நிச்சயம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி விளக்காய் இருப்பாள்.

மேலும் சிறந்த துறவியாக வலம் வருவாள். அவள் ஏற்கனவே ஒரு துறவியாக ஆயிரம் கிலோமீட்டர் பாதங்களால் நடந்து சென்று துறவிகளின் வாழ்க்கை சூழலை நன்கு உணர்ந்தவள். இன்று துறவியாகவே மாறிவிட்டாள்’ என கூறினார். தனது இந்த முடிவு குறித்து குஷி கூறுகையில், ‘நாம் கொண்டாடும் இந்த வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. உலகம் நமக்கு இதையே திரும்ப திரும்ப எடுத்துரைக்கும்.

அமைதியாகவும், ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் இருக்க எளிமையான வாழ்வினை வாழ வேண்டும்’ என கூறியுள்ளார். குஷி துறவியாவதை கொண்டாடும் விதமாக குடும்பத்தினர் அனைவரும் கோலாகலமாக கொண்டாடினர். குஷி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த 6ம் வகுப்புத்தேர்வின்போது 97 சதவீதம் பெற்று தேர்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.