பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சை கொடுத்தால் பிரதமரையும் ஜனாதிபதியையும் சிறையிலடைப்பார் – குணரத்ன

பாதுகாப்பு அமைச்சை சரத் பொன்சேகாவுக்கு கொடுக்குமாறு கூறினார்கள். சரத் பொன்சேகாவுக்கு அந்த அமைச்சைக் கொடுத்தால் முதலாவதாக பிரதமரையும், ஜனாதிபதியையும் பிடித்து சிறையிலடைப்பார் என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.

குண்டு வெடித்த பின்னர் யாரும் நினைக்கவில்லை இந்த நாட்டிலுள்ள பல வருடங்களாக எம்மோடு வாழ்ந்துவரும் பிரிவினர் இனவாதத்திற்குச் சென்று தற்கொலைக் குண்டுதாரியாக மாறுவார்கள் என்று. அதுதான் உண்மைக்கதை. எனினும் குண்டு வெடித்தது.

ஒருவாரத்திற்குள் அனைத்து குண்டுதாரிகள், ஐ.எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். அதன் பின்னர் என்ன கூறினார்கள்? பாதுகாப்பு அமைச்சை சரத் பொன்சேகாவுக்கு கொடுக்குமாறு கூறினார்கள். சரத் பொன்சேகாவுக்கு அந்த அமைச்சைக் கொடுத்தால் முதலாவதாக பிரதமரையும், ஜனாதிபதியையும் பிடித்து சிறையிலடைப்பார்.

நுவரெலியா நானுஓயா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சரத் பொன்சேகா பற்றி எமக்கு நன்றாக தெரியும். அவரைப்பற்றி தெரியாமல் சிலர் கையெழுத்து எடுத்து ஜனாதிபதியிடம் கொடுத்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பின்னர் பொலிஸ், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இந்த நாட்டில் சமாதானத்தை ஜனாதிபதி ஏற்படுத்தியிருப்பதோடு இன்றுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்போது அசாத்சாலி, ரிஷாட் பதியூதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் மீது தாக்குகின்றனர்.

இவர்கள் இந்த சம்பவங்களுக்கு தொடர்பிருந்தால் ஆதாரங்களுடன் முறையிடுங்கள். அவ்வாறு முறைப்பாடு செய்தால் பொலிஸார் இராணுவத்தினர் விசாரணை நடத்தி தீர்மானிப்பார்கள். வெறுமனே பேசுவதன் ஊடாகவும், ஊடகங்களில் குரல்பதிவுகளை வழங்கியதாலும் ஒருநபர் குற்றவாளியாகியிடமாட்டார்.

இப்போது ரிஸாட் பதியூதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிந்தேன். இந்த தீர்மானத்தில் 12 விடயங்கள் உள்ளன. அதனை நிரூபிக்கவும் முடியாது, இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றிகொள்ளவும் வைக்க முடியாது என்று நான் கூறுகிறேன்.

எந்தவொரு விசாரணையின்றியே இது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நாட்டில் கணக்காய்வாளர் வழங்கிய அறிக்கை உள்ளது. இந்த ரிஸாட் நாட்டிற்கு ஏற்படுத்திய நட்டம் குறித்த ஆவணங்கள் உள்ளன. ஆனால் இவற்றையல்லாமல் வெறுமனே விடயத்திற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

சிலர் ஜனாதிபதி தேர்தலையும், அரச மாற்றத்தையும் கேட்கின்றனர். நாட்டில் நெருக்கடி நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றால் என்ன நடக்கும்? ஒட்டுமொத்த பொறிமுறையும் 4 முதல் 5 மாதங்களுக்கு ஸ்தம்பிதமடைந்துவிடும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!