இன்று காலை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இரண்டாவது முறையாகவும், இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் புதுடெல்லி சென்றிருந்தார்.

நேற்று மாலை இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், ஏனைய 7 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்தப் பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர், நேற்றிரவு 10.30 மணியளவில் கிர்கிஸ்தான் நாட்டின் அதிபர், சூரோன்பே ஜீன்பேகோவ்வுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

நிகழ்வில் பங்கேற்க வந்துள்ள ஏனைய நாடுகளின் தலைவர்களை இன்று காலை தொடக்கம் இந்தியப் பிரதமர் சந்திக்கவுள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில், பங்களாதேஷ் அதிபரையும், அதையடுத்து, 10.50 மணியளவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், இந்தியப் பிரதமர் சந்திக்கவுள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஹைதராபாத் ஹவுசில், 20 நிமிடங்கள் மாத்திரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!