தெரிவுக்குழு விசாரணையால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!- ஜயம்பதி விக்ரமரட்ண

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுக்க முடியாத அதிகாரிகளின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதானது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது, என்று தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதில் தலைவர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண கூறினார்.

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணையை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் பார்வையிடச் செய்வது ஒரு வாய்ப்பாக மட்டுமன்றி எமக்கு ஒரு சவாலாகவும் உள்ளது. ஏனெனில் இதற்கு முன் இவ்வாறு இடம்பெறவில்லை. இது ஒரு நீண்டகால தேவையாகும்.

இனிமேல் வரும் ஒவ்வொரு பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையும் ஊடகங்களும் மக்களும் பார்க்கும் வகையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட வேண்டும். எதையும் அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு. அத்துடன் தகவல் அறியும் சட்டமும் அதையே கூறுகிறது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள தகவல்களை வெளியிடுவது தொடர்பாக சாட்சிகள் கவனமாக இருக்க வேண்டுமென பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் அடிக்கடி எச்சரித்து வந்துள்ளனர். கடந்த புதன்கிழமை ஆணைக்குழு முன்னிலையில் தோன்றிய இரு சாட்சிகளும் நல்ல அனுபவமுள்ள அதிகாரிகள் ஆவர். அவர்கள் எம்முடன் தனிப்பட்ட ரீதியிலும் பேசியுள்ளனர். விசாரணையின்போது வெளியிடப்பட்ட எந்தவொரு தகவலும் இரகசியமானது என்று கூறமுடியாது.

பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர்ந்த தரத்தை கொண்ட அதிகாரிகளின் பெயர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எனவே அவர்களது பெயர்களை வெளியிடுவதால் அவர்களது பாதுகாப்பு ஆபத்து உள்ளது என்று கூறமுடியாது. எனினும் புலனாய்வு சேவையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் தம்மைப் பற்றிய விபரங்கள் வெளிவருவதை விரும்புவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!