வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்ற பெயரை இழந்த இந்தியா!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினை தொடர்பான ஆய்வு அறிக்கையை தேசிய புவியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அந்த ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் பொருளாதாரம் மிக குறைவான வளர்ச்சி விகிதத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக விவசாயம், தொழில், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் கடந்த 9 மாதங்களாக மந்தநிலை நிலவி வருவதும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் வேலையின்மை பிரச்சினை 6.1 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள அதிகரிப்பு என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

2018 ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 6.8 சதவீதம் வளர்ச்சியடைந்து இருந்தது. அதே வேளையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் வெறும் 5.8 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்த இந்தியாவை சீனா முந்தியது. இதன் மூலம் கடந்த இரண்டாண்டுகளில் முதல் முறையாக, இந்தியாவை முந்திய சீனா, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற பெயரை பெற்றது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளே, நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்று வல்லுநர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். சுதந்திர இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு, இரண்டாவது பெண் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு கடும் சவாலை அளிக்கும் என்று கருத்தப்படுகிறது.

மோடியின் முந்தைய அரசு, சரிவர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஏனெனில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2017 முதல் 2018 வரையிலான நிதியாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய மத்திய அரசின் சமீபத்திய தரவுகளை பார்க்கும்போது, நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்வது தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!