குருநாகல மருத்துவருக்கு எதிராக முஸ்லிம் பெண்ணும் முறைப்பாடு

சிங்களப் பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்படும் குருநாகல மருத்துவமனை மகப்பேற்று நிபுணர் செய்கு சியாப்தீனுக்கு எதிராக முஸ்லிம் பெண் ஒருவரும் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

அதிகளவு சொத்துக்களை சேகரித்துள்ளமை தொடர்பான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர், செய்கு சியாப்தீன், பிரசவத்தின் போது, அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு, 4000இற்கும் அதிகமான பெண்களுக்கு, கருத்தரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினார் என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்தி வரும் நிலையில் குறித்த மருத்துவருக்கு எதிராக குருநாகல மருத்துவமனையில் அவருக்கு எதிரான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

நேற்று வரை, 737 பெண்கள், அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று. 26 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவரும் முறைப்பாடு செய்தார். இவர் சிங்களவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

தாம் இரண்டாவது பிரசவத்துக்காக குருநாகல மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர் சியாப்தீன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தார் என்றும், அதற்குப் பின்னர் தன்னால் கருத்தரிக்க முடியவில்லை என்றும் அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.