நாடு பாலைவனமாக மாறுவதைத் தடுக்க முடியாது – ஜனாதிபதி

சுற்றுச்சூழலை பாதுகாக்காவிடின் எதிர்வரும் 15 – 20 வருடங்களில் நாடு பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்தார்.

எனவே சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய அக்கறையோடு மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ்வதற்கான உரிமையை பாதுகாக்கவும் நாடு பாலைவனமாக மாறுவதை தடுக்கவும் அனைவரும் தத்தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட துனுமடலாவ பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்திலுள்ள பைன் மரங்களை அகற்றி அதற்கு பதிலாக அங்கு உள்நாட்டு வன வளர்ப்பினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (06) அப்பிரதேசத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தூய்மையான பசுமை நகரைக் கட்டியெழுப்பி, உயிர்ப்பல்வகைமையை பாதுகாக்கும் துரு பிரஜாவ எனும் பெயரில் இச்செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதனை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதி அவர்கள் அங்கு இலுப்பை மரக்கன்றொன்றினை நாட்டினார்.

நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 28 சதவீதமாகக் காணப்படும் இந்நாட்டின் வனப் பரம்பல் வருடாந்தம் 1.5 சதவீதமாக குறைவடைந்து வருவதாக குறிப்பிட்டார். தொடர்ச்சியாக இவ்வாறு வனப்பரம்பல் வீழ்ச்சியடையுமாயின் 15 – 20 வருடங்களுக்குள் நாடு பாலைவனமாக மாறுவதை தவிர்க்க முடியாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக நாட்டின் வன வளங்களைப் பாதுகாப்பதற்கு அனைவரும் நிபந்தனைகளின்றி ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தினார்.

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மாத்தளை நகர பிதா டல்ஜித் அலுவிகார, கண்டி நகர பிரதி மேயர் இலானி ஆப்தீன், பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!