சிறிலங்காவுடனான மூலோபாய உறவு வலுப்பெறும் – இந்தியப் பிரதமர்

சிறிலங்காவுக்கும், மாலைதீவுக்கும் தாம் மேற்கொள்ளவுள்ள பயணங்களின் மூலம், இரண்டு அண்டை நாடுகளுடனுமான, இருதரப்பு மற்றும் மூலோபாய உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, இன்று மாலைதீவுக்கு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

அங்கிருந்து திரும்பும் வழியில், நாளை அவர் குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சிறிலங்கா வரவுள்ளார்.

இந்தப் பயணம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி,

“அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற எமது கொள்கைக்கு அமையவும், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நோக்கிலும், மாலைதீவுக்கும் சிறிலங்காவுக்குமான எனது பயணம், எமது கடல்சார் அண்டை நாடுகளுடன், நெருங்கிய மற்றும் சுமூகமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்.

ஈஸ்டர் நாளன்று, பயங்கரமான பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்ட, பெரும் வேதனையையும் அழிவையும் அனுபவித்த சிறிலங்கா மக்களுடன் இந்திய மக்கள் உறுதியுடன் நிற்கின்றனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், சிறிலங்காவை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!