கத்துவா சிறுமி பாலியல் வழக்கு; 6 பேர் குற்றவாளிகள்!

காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோயிலின் நிர்வாகியும், முக்கிய குற்றவாளியுமான சஞ்சி ராம், அவரது மகன் மற்றும் அவனது நண்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்துவா வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி இது பற்றி கூறுகையில், பக்கர்வால் சமுதாய மக்களை மிரட்டவே, கத்துவா சிறுமியை கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளார் சஞ்சி ராம். ஆனால், அச்சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதும், அந்த குற்றத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதை அறிந்த பிறகே, மகனை காப்பாற்ற சிறுமியை கொலை செய்ய முடிவெடுத்ததாக விசாரணையின் போது கூறியதாக தெரிவித்துள்ளார்.

சிறுமி கடந்த ஜனவரி 10ம் தேதி கடத்தப்பட்டுள்ளார். அன்றைய தினமே ராமின் உறவுக்கார பையனான சிறார் குற்றவாளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமி 10ம் தேதி கடத்தி வரப்பட்ட நிலையில், 13ம் தேதி தான் அவர் பலாத்காரத்துக்கு உள்ளான விஷயம் தனக்கு தெரிய வந்ததாகவும், உறவுக்கார பையன்தான் அதனை ஒப்பு கொண்டதாகவும் சஞ்சி ராம் கூறியுள்ளார்.

இந்த பலாத்காரத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதால், அவனை காப்பாற்றவே கத்துவா சிறுமியை கொலை செய்ய முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், பக்கர்வால் மக்களை மிரட்ட நினைத்த தனது திட்டமும் இதன் மூலம் நிறைவேறும் என்று அவர் கருதியுள்ளார். இந்த வழக்கு பஞ்சாப் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான தண்டனை விவரம் பிற்பகல் 2 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!