92 வயது மஹாதீர் முகமது தலைமை அமைச்சராகத் தெரிவு!!

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மஹாதீர் முகமது தலைமையிலான, எதிர்க்கட்சிகள் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, 92 வயதான, மஹாதீர், தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.

தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், சுதந்திரமடைந்தது முதல், ‘பாரிஸன் நேஷனல்’ கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. மலேசியாவின் தலைமை அமைச்சராக , 1981 இல் பதவியேற்ற மஹாதீர் முகமது, 2003 ஆம் ஆண்டு வரை, அந்தப் பதவியில் நீடித்தார். மஹாதீர் ராஜினாமா செய்ததையடுத்து, அப்துல்லா படாவி தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 2009 இல், படாவி பதவி விலகியதையடுத்து, நஜீப் ரஜாக், தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.

இவரது ஆட்சியில், பல்வேறு முறைகேடு கள் எழுந்தன. இதையடுத்து, மஹாதீர், ரஜாக்குக்கு எதிராக, போர்க்கொடி துாக்கினார். மஹாதீர் தலைமையில், எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து, எம்.யு.ஐ.பி., எனப்படும், மலேசிய ஐக்கிய உள்நாட்டுக் கட்சி என்ற பெயரில் கூட்டணி அமைத்தன.

இந்த நிலையில், மலேசியாவின், 13-வது நாடாளுமன்றம் , சமீபத்தில் கலைக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை, மன்னர் சுல்தான் முகமதுவின் ஒப்புதலுக்கு பின், தலைமை அமைச்சர் ரஜாக் வெளியிட்டார். இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மொத்தமுள்ள, 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், தலைமை அமைச்சர் நஜீப் ரஜாக்கின் ஆளும் கட்சிக்கும், மஹாதீர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும், கடும் போட்டி நிலவியது.

வாக்குப்பதிவு, நேற்று முன்தினம் மாலை முடிந்ததும்,வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், ஆளும் கட்சியை விட, மஹாதீர் முகமது தலைமையிலான கூட்டணி, அதிக இடங்களைக் கைப்பற்றியது. மொத்தம் உள்ள, 222 தொகுதிகளில், 121 இல் வென்று, மஹாதீர் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சி, 79 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதன் மூலம், சுதந்திர மடைந்து, 61 ஆண்டுக்குப் பின், மலேசியாவில், முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 92 வயதாகும் மஹாதீர், மீண்டும் தலைமை அமைச்சராகப் பதவி யேற்றார். மிக அதிக வயதில், தலைமை அமைச்சராகப் பதவியேற்றவர் என்ற பெயரும், இவருக்கு கிடைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!