பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்பு

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இருவர், மீண்டும் சற்று முன்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சராக இருந்த றிஷாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலகக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, எழுந்த சூழ்நிலைகளால், அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம்களான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் 9 பேர் கடந்த 03ஆம் நாள் பதவி விலகினர்.

இவர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு மகாநாயக்கர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், ஐதேகவைச் சேர்ந்தவர்களான கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் இன்று மீண்டும் தமது அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசிமும், அஞ்சல், அஞ்சல் சேவைகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சராக ஹலீமும் பதவியேற்றனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வது குறித்து இன்று கூடிய ஆராயவுள்ளது.

எனினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடனடியாக அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. றிஷாத் பதியுதீன் அமைச்சராக நியமிக்கப்பட்டால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் முன்வைக்கப் போவதாக கூட்டு எதிரணி எச்சரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!