என்ன செய்யப் போகிறது இலங்கை? – கேள்வி எழுப்பும் கோத்தா

2030 ஆம் ஆண்டுகளில் உலகின் பொருளாதார போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடத்தை பிடிக்கும். அடுத்த கட்டமாக ஆசியாவை நோக்கிய உலகமயமாக்கல் சக்திகள் பரிணமிக்கும். இவ்வாறான நிலையில் இலங்கை என்ன செய்யப்போகின்றது? பொருளாதார வளர்ச்சி ஓட்டத்தில் இணைந்து பயணிப்பதா அல்லது தனித்து விடப்படுவதா என்ற கேள்விகள் எழுகின்றன என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

“அறிவியல் மிகுந்த இலங்கை ” எனும் தொனிப்பொருளில் வியத்மக எனும் நிகழ்வு நேற்று கொழும்பு ஷங்க்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச சிவல் அமைப்புகளின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே கோதாபய ராஜபக் ஷ இதனைக் குறிப்பிட்டார்.

‘உயர்மட்ட அரசியல் மற்றும் அரசாங்க துரையின் ஊழலே இன்று நாட்டினை பாரிய நெருக்கடியாக மாற்றியுள்ளது. உயர் மட்ட அரசியல் ஊழல் மற்றும் உயர் மட்ட அரசாங்க துறையின் ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும். ஊழல் இல்லாத அரசாங்கம் மற்றும் அரச சேவையினை கட்டியெழுப்பும் நகர்வுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இனங்களுக்கு இடையலான சமத்துவம், சட்ட ஒழுங்குகளில் சுயாதீனம் மற்றும் ஜனநாயக செயற்பாடுகளை பலப்படுத்தும் பொருளாதார நோக்கு இருக்க வேண்டும் .

2030 ஆம் ஆண்டுகளில் உலகின் பொருளாதார போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடத்தை வைக்கும் எனவும் மூன்றாம் இடத்தில் இந்தியாவும், நான்காம் இடத்தில் ஜப்பானும் ஐந்தாம் இடத்தில் இந்தோனேசியாவும் இருக்கும் என உலக அறிவியலாளர் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ஆகவே அடுத்த கட்டமாக ஆசியாவை நோக்கிய உலகமயமாக்கல் சக்திகள் பரிணமிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறான நிலையில் இலங்கை என்ன செய்யப்போகின்றது? பொருளாதார வளர்ச்சி ஓட்டத்தில் இணைந்து பயணிப்பதா அல்லது தனித்து விடப்படுவதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆகவே தான் வியத்மக எனும் அறிவியல் மிகுந்த அமைப்பினை உருவாக்கி அதன் மூலமாக இலங்கையை அறிவியல் பொருளாதரத்தின் பக்கம் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தினை நாம் ஆரம்பிக்க தீர்மானம் எடுத்துள்ளோம்.

பொருளாதார வளர்ச்சியால் மட்டுமே எமது நாட்டினை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல முடியும். பொருளாதார பலம் இல்லையேல் வேறு எந்த செயற்பாட்டினையும் வெற்றி கொள்ள முடியாது. நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கான பதில் இந்த ஒரு விடயத்திலேயே தங்கியுள்ளது. ஆனால் எமது நாட்டின் அடிப்படை பொருளாதார தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி கட்டமைப்பில் மாற்றங்களை செய்தாக வேண்டும். நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் கலாசார தன்மைகளை கருத்தில் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதேபோல் உலகுடன் இணைந்த பொருளாதார பயணம் ஒன்று முன்னெடுக்கப்படுவதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

இலங்கையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பொருளாதார முறைமைகள் குறைந்த அளவிலான தொழிநுட்ப முறைமையிலே பயணிக்கின்றது. ஆகவே புதிய தொழிநுட்ப பொருளாதார நகர்வுகளை நாம் கையாள வேண்டும். திறன்சார், தொழிநுட்ப அறிவுசார் பொருளாதார நகர்வுகளை கையாள வேண்டும். தனிநபர் வருமானம் தலா 4000 டொலர்கள் என்ற நோக்கினை இன்று உலக நாடுகள் கருதுகின்ற நிலையில் நாமும் அதற்காக பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் சர்வதேச முதலீடுகள் அவசியமான ஒன்றாக உள்ளது. முதலீடுகள் பலமானதாக அமைய வேண்டும். பலவீனமான முதலீடுகள் நாட்டின் கடன் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். அத்துடன் வியாபார நோக்கம் கொண்ட முதலீடுகளுக்கே முக்கியத்துடம் வழங்கபட வேண்டும். அதேபோல் விவசாய துறையினை பலப்படுத்த வேண்டும். எனினும் விவசாய உற்பத்திகளையும் தொழிநுட்பம் சார்ந்த விவசாயமாக கையாள வேண்டும்.

அதேபோல் அரசியல் அமைப்பு சார்ந்த நகர்வுகளே முக்கியமானதாகும். அரசியல் அமைப்பிற்கு அப்பாலான எந்த செயற்பாடுகளும் நாட்டினையே பாதிக்கும். அத்துடன் இனங்களுக்கு இடையிலான சமத்துவம், சட்ட ஒழுங்குகளில் சுயாதீனம் மற்றும் கடினத்தன்மை, ஜனநாயக செயற்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இன்று எமக்குள்ள பாரிய நெருக்கடி அரச துறையின் மற்றும் அரசியல் உயர் மட்ட ஊழல் மோசடிகளேயாகும். உயர் மட்ட அரசியல் ஊழல் மற்றும் உயர் மட்ட அரசாங்க துறையின் ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும். ஊழல் இல்லாத அரசாங்கம் மற்றும் அரச சேவையினை ஒன்றினை கட்டியெழுப்பும் நகர்வுகளை நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!