நியூஸிலாந்து துப்பாக்கி சூடு: காணொளியை பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி துப்பாக்கி ஏந்திய நபர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அந்த நபர் சமூக வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். இறுதியில், இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான அவுஸ்திரேலிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் சமூக வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப பட்டபோது அதனை பல இணையதள பயனாளர்கள் பகிர்ந்தனர். அதனை பேஸ்புக், யூடியூப் போன்ற நிறுவனங்கள் தங்களது வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கின.

இவ்வாறு நியூசிலாந்து துப்பாக்கி சூடு தாக்குதலை சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்ததாக கிரைஸ்ட்சேர்ச் பகுதியை சேர்ந்த பிலிப் ஆர்ப்ஸ் என்ற தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்த விசாரணை நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி கூறியதாவது:-

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை குற்றவாளி பிலிப் ஆர்ப்ஸ் மனிதாபிமானம் இன்றி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்து உள்ளார்.

இத்தகைய இரக்கம் அற்ற செயலை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அதனை மிகவும் அருமையான காட்சி என வர்ணித்துள்ளார். இது மிகப்பெரிய குற்றம் ஆகையால், குற்றம் சாட்டப்பட்ட பிலிப் ஆர்ப்ஸ்க்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கிறேனன் என நீதிபதி கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!