ஐஎஸ் இளைஞனை நானே கொலை செய்தேன் – யுத்த குற்ற விசாரணையில் அமெரிக்க படைவீரர்

ஈராக்கை சேர்ந்த ஐஎஸ் உறுப்பினர் ஒருவரை தானே கொலை செய்ததாக அமெரிக்க நேவி சீல் வீரர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் சான்டியாகோவில் இடம்பெற்றுவரும் நீதிமன்ற விசாரணைகளின் போது கொரே ஸ்கொட் என்ற நேவி சீல் வீரர் இதனை தெரிவித்துள்ளார்.

விசேட படைப்பிரிவின் தளபதி எட்வேர்ட் கலகரின் யுத்த குற்றங்கள் குறித்து இடம்பெற்றுவரும் விசாரiணைகளின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படையினரிடம் பிடிப்பட்ட கைதியை கத்தியால் குத்தி கொலை செய்ததுடன் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தார் என எட்வேர்ட் கலகர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

விமானதாக்குதல்கள் காரணமாக காயமடைந்த நிலையில் காணப்பட்ட ஐஎஸ் இளைஞன் ஒருவன் உயிருடன் மீட்கப்பட்டான்,அவனது காயங்களிற்கு சிகிச்சை அளித்து அவனிற்காக உயிராபத்தை தவிர்த்த பின்னர் திடீரென கலகர் அந்த இளைஞனை கத்தியால் குத்தினார் என நேவி சீல் வீரர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த கத்திக்குத்தினால் ஐஎஸ் இளைஞரின் உயிருக்கு ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தளபதி அங்கிருந்து சென்றதும் நான் அந்த இளைஞனிற்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த செயற்கைசுவாசத்தை துண்டித்து கொலை செய்தேன் என கொரே ஸ்கொட் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட ஐஎஸ் இளைஞன் உயிர் தப்பினாலும் அவனை ஈராக்கிய படையினர் சித்திரவதை செய்வார்கள் என்பதை கருத்தில்கொண்டே நான் இதனை செய்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் எப்படியும் கொலை செய்யப்படுவார் என்பது தெரியும் அவர் சித்திரவதை செய்யப்படுவதை தவிர்க்க விரும்பினேன் என கொரே ஸ்கொட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தளபதி கலகர் குற்றவாளியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!