நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம்!- மஹிந்த

இன்னும் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இது உறுதி என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியால் விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தோரின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“உயிர்த்த ஞாயிறு தினமன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து அரசு தப்பிக்க முயற்சிக்கின்றது.இதன்காரணமாகவே எல்லாப் பொறுப்பையும் அதிகாரிகள் மீது திணிப்பதற்கு அரசு திட்டமிடுகின்றது. இந்தத் தாக்குதல்களால் முஸ்லிம் மக்களே இன்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அடிப்படைவாதிகளைப் புனர்வாழ்வுக்குட்படுத்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும். போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்தோம்.இன்று நிம்மதி பறிபோயுள்ளது. எனவே, நாட்டை நேசிக்கும் தலைவரொருவர் அவசியம். இன்னும் 4 மாதங்களில் இந்த அரசின் ஆயுட்காலம் முடிவடைந்துவிடும். எந்தத் தேர்தல் வந்தாலும் நாம் வெற்றி பெறுவது உறுதி. எமது ஆட்சியின் கீழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!