போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை

போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரை தூக்கிடுவதற்கான ஆணையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதனை ஊடகவியலாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

4 பேரைத் தூக்கிலிடுவதற்கான ஆணையில் தாம் கையெழுத்திட்டுள்ளதாகவும், அவர்களுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

சிறிலங்காவில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம், ஜூன் 23ஆம் நாள் தொடக்கம், ஜூலை 1ஆம் நாள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு 13 மரணதண்டனைக் கைதிகளைத் தூக்கிலிட சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும் அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியிருந்தது.

எனினும், நேற்றிரவு 8 மணி வரை, கைதிகளைத் தூக்கிலிடுவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்து எந்த தகவலும் தனக்கு அனுப்பப்படவில்லை என, சிறிலங்கா சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!