சமையல் செய்வது யார்? – அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

ஹரியானாவில், சமையல் செய்வது யார் என்ற தகராறில், அண்ணனை தம்பியே வெட்டிக் கொன்றுள்ளார். சமையல் செய்வது யார் என்ற தகராறு ஒவ்வொரு வீட்டிலும் அடிக்கடி நடப்பதுண்டு. அதுதொடர்பான தகராறு, ஹரியானாவில் குருக்ராம் பகுதியில் நடந்துள்ளது. இந்தத் தகராறில், தம்பியே அண்ணனை வெட்டிக் கொலைசெய்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சரஸ்வதி என்கிளேவ் பகுதியில் குடியிருந்தவர், ஜெய்சிங். இவரின் தம்பி பல்வந்த் சிங். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள், ஒரே அறை எடுத்துத் தங்கியிருந்தனர். இருவரும் வெல்டிங் வேலை செய்துவந்தனர்.

இந்த நிலையில் ஜெய்சிங், ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் இறந்துகிடந்த தகவல் கிடைத்ததும், அவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தோம். அப்போது, அவரின் தம்பி பல்வந்த் சிங்தான் அண்ணனைக் கொலைசெய்தார் என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தோம். விசாரணையின்போது, பல்வந்த் சிங் தெரிவித்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரைக் கைதுசெய்துள்ளோம்” என்றனர்.

போலீஸாரிடம் பல்வந்த் சிங் கொடுத்த வாக்குமூலத்தில், “என் மூத்த சகோதரர் ஜெய்சிங், வீட்டுக்கு சரியான நேரத்துக்கு வரமாட்டார். இது, எனக்குத் தொந்தரவாக இருந்தது. மேலும், என்னையே சமைக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவார். கடந்த மூன்று நாள்களுக்கு முன், எங்களுக்குள் சண்டைவந்தது. அப்போது, ‘நீயே சமையல் செய்துகொள்’ என்று அவரிடம் நான் தெரிவித்தேன்.

ஆனால், சம்பவத்தன்றும் அவர் வழக்கம்போல தாமதமாகவே வீட்டுக்கு வந்தார். என்னை சமைக்கும்படி வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரின் தொண்டையில் கத்தியால் வெட்டிக் கொலைசெய்தேன்” என்று தெரிவித்துள்ளார். சமையல் செய்வதில் நடந்த தகராறில் அண்ணனைத் தம்பி கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!