மனிதன் அழித்த இடத்தை மீட்டெடுக்கும் விலங்குகள்!

1986 ஏப்ரல் 26, அன்றைய ரஷ்யா இன்றைய உக்ரைனின் செர்னோபில், இரவு 1 மணி திடீரென்று அவ்வளவு பயங்கர சத்தத்துடன் அந்த அணு உலை வெடித்துச் சிதறியது. கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் எதிர்ப்படுகிற அனைவருக்கும் தன்னுடைய கதிர்வீச்சைப் பரிசாக அளித்துப் போகிறது யுரேனியமும், புளூட்டோனியமும். அது மனிதன் ஏற்படுத்திய மிகப்பெரிய பேரழிவு. இயற்கை ஏற்படுத்துகிற பேரழிவுகளில் சேதங்கள் அதிகம் இருப்பினும், பின் விளைவுகள் சில சமயம் நல்லவையாகவும் இருக்கும். ஆனால், மனிதன் ஏற்படுத்துகிற அழிவுகளில் பின் விளைவுகள் மோசமானதாக மட்டுமே இருக்கும். அதற்கு மிக முக்கியமான சான்று இந்த செர்னோபில். 90,000 பேரைப் பலி வாங்கிய இந்தப் பேரழிவுக்குப் பின்னர் செர்னோபில்லைச் சுற்றி 18 மைல் பரப்பளவுக்கு மனிதன் காலடி பதிக்க முடியாத அளவு கதிர்வீச்சு நிறைந்த இடமாக மாறுகிறது.

1000 மைல் பரப்பளவுக்கு இன்று வரை மனிதன் வாழத் தகுதியற்ற இடமாகத்தான் இருந்து வருகிறது. அந்த இடமே ‘எக்ஸ்க்ளூஸன் ஸோன்’ஆக ( Exclusion zone) அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 1000 மைல் பரப்பளவுக்குள் மனிதன் நுழைய முடியாமல் இருப்பதில் ஒரு நன்மை நடந்திருக்கிறது. அந்தப் பேரழிவு நடந்த சமயத்தில் மனிதர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்களே தவிர, விலங்குகளோ மற்ற எந்த உயிரினங்களோ அப்புறப்படுத்தப்படவில்லை. நேஷனல் ஜியோகிராஃபி நடத்திய சர்வேயில் தெரிய வந்த தகவல்கள் இதோ.

செர்னோபில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 42 கேமாராக்கள் பொருத்தப்பட்டு ஐந்து வாரம் சர்வே நடத்தப்படுகிறது. அதில் பல விலங்குகளின் புகைப்படங்கள் பதிவாகின்றன. பைசன்கள், பேட்ஜர்கள், பன்றிகள், சாம்பல் ஓநாய்கள், செந்நிற நரிகள் மற்றும் நீர்நாய்கள் எனப் பல விலங்குகள் கேமரா கண்களில் அகப்படுகின்றன. இதில் பல அரியவகை, அருகிவரும் உயிரினங்களும் உள்ளன. மிக மோசமாக வேட்டையாடும் விலங்குகளும், அமைதியான தாவர உன்னிகளும் அமைதியாக புது சகாப்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

விலங்குகள் மட்டும் அல்லாது தட்டான்கள், வெட்டுக்கிளிகள், வண்டுகள் மற்றும் பட்டாம்பூச்சிகளும் அங்கே சுற்றத்திரிவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதில் வருத்தமளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில், மேற்கூறிய அனைத்து உயிரினங்களின் பிறழ்வு (Mutation) விகிதமும் அதிகமாக இருக்கிறது. அவற்றின் ஆரோக்கியம் சாதாரண விலங்குகளுக்கு இருக்கும் அளவு இல்லை. ஒவ்வொன்றுக்கும் சில குறைகள் உள்ளன. கதிர்வீச்சினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் காரணமாக ஆரோக்கியம் குறைவாக உள்ளன. அவையனைத்தும் தினம் தினம் கதிர்வீச்சு தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அவை சாப்பிடும் சாப்பாட்டிலிருந்து குடிக்கும் தண்ணீர்வரை அனைத்திலும் கதிர்வீச்சு கலந்துள்ளது, இருப்பினும் அந்த உயிரினங்கள் அங்கே பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரே ஒரு காரணம், அது மனிதர்கள் வாழத்தகுந்த இடம் அல்ல.

30 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் இல்லாத சூழ்நிலையில், அந்தப் பேரழிவின் பின்விளைவாக ஓர் இயற்கையான வனவிலங்குகள் வாழும் இடமாக செர்னோபில் மாறியுள்ளது. அவை புதிதாக ஒரு சகாப்தத்தை, ஓர் அத்தியாயத்தை தாங்களாகவே தொடங்கியுள்ளன. மனிதனின் காலடி படும்வரை அவற்றுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இதில் இருந்து ஒன்று தெளிவாகின்றது. அணுக்கதிர்வீச்சு கூட அந்த விலங்குகளுக்குப் பெரிய அச்சுறுத்தல் இல்லை. மனிதன்தான் அந்த விலங்கினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!