கனமழையால் புனேவில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு!

மராட்டியத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதம் பருவமழை காலம் ஆகும். இந்த ஆண்டு பருவமழை தாமதமாகவே தொடங்கும் என ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதன்படி பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மும்பையில் வழக்கமாக மழை ஜூன் 10-ந் தேதி தொடங்கி விடும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை இந்த ஆண்டு 15 நாட்கள் தாமதத்திற்கு பிறகு தொடங்கியது. இருந்தாலும் பெரியளவில் மழை பெய்யவில்லை. இந்தநிலையில், மும்பை உள்பட மாநிலம் முழுவதும் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இதன்படி நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று காலை தீவிரமடைந்தது. மும்பையில் நகரம் முழுவதும் விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது. புனே நகரில் கனமழை கொட்டியது. இதனால், மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வாகனங்கள் வெள்ளநீரில் தத்தளித்தபடி சென்றன.

இதற்கிடையே, புனே அருகே உள்ள கொந்த்வா என்ற இடத்தில் குடியிருப்பு கட்டிடத்தின் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 15 பேர் சிக்கி பலியாகினர். அருகில் இருந்த குடிசைகளும் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சில கார்கள் சிக்கியுள்ளன. தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!